நந்திவர்மன் என்னும் அரசன் உண்டாக்கிய ஊர் என்றும், அவன் கட்டிய கோயில் என்றும் கூறுவர். நந்தி தேவர் ஒரு சாபத்தால் மகாவிஷ்ணுவை வழிபட்ட தலம். அதனால் 'நந்திபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. சன்னதியின் இடது பக்கச் சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். இங்குள்ள நந்தி புஷ்கரணியில் தை அமாவாசையன்று ஸ்நானம் செய்தால் பாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மூலவர் ஜெகந்நாதப் பெருமாள், விண்ணகரப் பெருமாள், நாதநாதன் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் 'செண்பகவல்லித் தாயார்' என்றும் வணங்கப்படுகின்றார். நந்தி, மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
சிபி சக்கரவர்த்தி புறாவிற்காக தன் தசையை அறிந்து தராசுத் தட்டில் வைத்தான். அது சமமாகாமல் இருக்க, தானே புறாவின் எடைக்குச் சமமாக எதிர்த்தட்டில் அமர்ந்த அதிசயத்தைக் காண பெருமாள் மேற்கு முகமாக எழுந்தருளிய தலம்.
நாச்சியாருக்கும், ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஐப்பசி சுக்ல பட்சத்தில் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும். இக்கோயில் வானமாமலை மடத்து நிர்வாகத்தில் உள்ளது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|